தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகரும் வதைக்கூடமாகும் ரயில் பெட்டிகள்.. கூட்ட நெரிசலால் தவிக்கும் திருப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள்.. ரயில்வே தரும் தீர்வு என்ன? - migrant workers

Tirupur migrant workers: தமிழகத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பண்டிகை காலங்களில் தங்களது ஊர்களுக்கு செல்ல போதிய ரயில் சேவை இல்லாததால் வரைமுறையின்றி கிடைத்த ரயில்களில் ஏறி பயணிக்கின்றனர். வடமாநிலத்தவரின் இந்த கூட்ட நெரிசலில் தப்பித் தவறி உள்ளூர் மக்கள் ஏறினால் சித்ரவதைதான் என மனம் நொந்து கூறுகின்றனர்.

ரயில்களை ஆக்கிரமிக்கும் வடமாநிலத்தவர்களால் மக்கள் வேதனை
ரயில்களை ஆக்கிரமிக்கும் வடமாநிலத்தவர்களால் மக்கள் வேதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 7:52 PM IST

Updated : Nov 16, 2023, 2:02 PM IST

நகரும் வதைக்கூடமாகும் ரயில் பெட்டிகள்.. கூட்ட நெரிசலால் தவிக்கும் திருப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள்..

திருப்பூர்: "அந்த சில மணி நேரங்களில் எத்தனை கண்கள் என்னை நோட்டமிட்டன என்றே தெரியவில்லை" இது நவம்பர் 5ம் தேதி சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்த ஒரு பெண்ணின் வேதனைப் பதிவு. கொச்சுவேலியிலிருந்து கோரக்பூர் செல்லும் அந்த ரயிலில் முன்பதிவு செய்திருந்த நம்பிக்கையுடன் ஏறிய அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நூற்றுக்கணக்கில் அல்ல, ஆயிரக்கணக்கான மனிதர்கள் தங்களை ரயிலுக்குள் திணித்துக் கொள்ள காத்திருந்தனர்.

எப்படியோ அடித்துப் பிடித்து ஏறியவருக்கு அடுத்த ஒவ்வொரு நிமிடமும் வதைதான். கணவர் மற்றும் மேலும் ஒரு நண்பருடன் ஏறியிருந்தாலும் சுற்றிலும் நின்றிருந்த கூட்டம், அவர்களை துன்புறுத்தியது. எழுத்துக்களால் எழுத இயலாத அவஸ்தைகளுக்கு ஆளான அந்த பெண், ரயில்வே பாதுகாப்பு படையின் உதவியை நாடியிருக்கிறார். ஆனால், அதுவும் தோல்வியில் முடிவடையவே எப்படியோ அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டார்.

இது அந்த பெண்ணால் சமூக வலைத்தளத்தில் எழுதப்பட்டதால் வெளிவந்த உண்மை, ஆனால் சொல்லப்படாத எண்ணற்ற அவஸ்தைகளும் கதைகளும் இந்த நெரிசலில் இருக்கின்றன. ஏன் இந்த அவஸ்தை , புலம் பெயர் தொழிலாளர்கள் ஏன் இப்படி பயணிக்கின்றனர் என அறிவதற்காக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றோம். கிட்டத்தட்ட போர்க்களம் போலத் தான் இன்னமும் காட்சியளிக்கிறது அந்த ரயில் நிலையம். தீபாவளிக்கு பின்னரும் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சில திருவிழாக்களுக்காக மக்கள் கூட்டம் ரயில்களை எதிர்பார்த்து காத்திருந்தது.

கைகளிலும் தலைகளிலும் சுமைகளை தூக்கிக் கொண்டு எறும்பு மொய்ப்பது போன்று ரயில்பெட்டிகளை மொய்த்துக் கொண்டிருந்தனர். சுமைகளோடு சுமைகளாக சிலர் தங்கள் குழந்தைகளையும் தூக்கி திணித்துக் கொண்டிருந்தனர். ரயில்களை நோக்கி அபாயகரமான வகையில் தண்டவாளங்களை கடந்து ஓடும் காட்சியும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. ஏன் இந்த நிலைமை?

அதிகரிக்கும் வடமாநில தொழிலாளர்கள்: தமிழ்நாட்டில் இன்றைய நிலைக்கு, முறைசாரா தொழில்கள் பெரும்பாலானவற்றில் புலம்பெயர் தொழிலாளர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து உள்ளது. ஜவுளி, கட்டுமானம், ஓட்டல் என அனைத்து தொழில்களிலும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பணி புரிகின்றனர். குறிப்பாக தொழில்நகரங்களான கோவை, திருப்பூர், சேலம் போன்ற நகரங்களில் இவர்கள் பணிபுரியும் எண்ணிக்கை அதிகம்.

வட மாநிலங்களுக்கு செல்ல தமிழகத்தின் தொழில்நகரங்களில் இருந்து வாராந்திர ரயில்கள் மட்டுமே உள்ள நிலையில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடிணமான ஒன்றாக இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களும் சாதாரண டிக்கெட்டை எடுத்துக் கொண்டு பயணிக்கிறார்கள். இடம் இல்லாத பட்சத்தில் முன்பதிவு பெட்டிகளில் அடுத்தவர் இருக்கைகள், நடைபாதைகள், கழிவறைகள் என அனைத்தையும் ஆக்கிரமித்து பயணம் செய்கிறார்கள்.

பின்னலாடை தொழில்நகரமான திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் மட்டும் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் அளவுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதாவது ஏரத்தாள இரண்டரை லட்சம் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

வரக் காரணம்:மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், உ.பி., அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் இங்கு பிழைப்பு தேடி வருகிறார்கள். திருப்பூரில் கிடைகின்ற வேலைவாய்ப்பு, வடமாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகப்படியான வருமானம் ஆகியவை அவர்களை இங்கு வருவதற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

சுமாராக 1500- 2500 கி.மீ., தூரத்தை கடந்து இங்கு வரும் புலம்பெயர் மக்கள், இங்கு தங்கி பணியாற்றுகிறார்கள். இப்படி தங்கி பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் இவர்கள் வாரத்தில் 6 நாட்கள், காலை முதல் இரவு வரை 12 மணி நேரம் பணியாற்றுபவர்கள். தேவைப்பட்டால் 16 மணி நேரம் கூட பணியாற்ற தயாரக இருக்கிறார்கள். இதனால் பின்னலாடை நிறுவனங்களும் இவர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

இப்படி ஆண்டு முழுவதும் பணியாற்றும் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 30 சதவீதத்துக்கும் மேல் குடும்பத்துடன் இங்கேயே வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி விடுகின்றனர். மற்றவர்கள் தனியாக தங்கி பணியாற்றி விட்டு ஊருக்கு செல்வார்கள். மாதக்கணக்கில் வேலை பார்த்து விட்டு, தீபாவளி, சாத் பூஜா (வடமாநிலங்களில் கொண்டாடும் பண்டிகை) போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் முழுமையாக பயன்படுத்துவது ரயில்களை தான்.

ரயில் சேவை குறைவு:ரயில் பயணமானது வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் கொடூரமானதாகவே அமைகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் நகரங்களிலும், கேரளத்தில் கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பணி புரிகிறார்கள். ஆனால் இந்த வழித்தடத்தில் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.

ஆயிரக்கணக்கானோர்க்கு ஒரு ரயில்:கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தன்பாத் செல்லும் ரயில் வாரத்திற்கு ஒரு முறை இயங்குகிறது. இதே போல கோவையிலிருந்து சில்ச்சாருக்கு ஒரு வாராந்திர ரயில், ராஜ்கோட்டுக்கு ஒரு வாராந்திர ரயில், ஜெய்ப்பூருக்கு ஒரு வாராந்திர ரயில், நிஜாமுதீனுக்கு ஒரு வாராந்திர ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இதை தவிர ஹரியானாவின் ஹிசார், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் பரவுணிக்கு தனித்தனியாக ஒரு வாராந்திர ரயில்கள் கிளம்பி செல்கின்றன. இந்த ரயில்களை இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் முழுமையாக பயன்படுத்த முடிகிறது. ஆனாலும் இங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இந்த ரயில்களின் ஏற்றமுடியக் கூடிய பயணிகளின் எண்ணிக்கை என்பது 5 சதவீதம் கூட கிடையாது.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் தடம் என்பது வடகேரளா மற்றும் தென்கேரள பகுதிகளுக்கு ரயில்கள் செல்லக் கூடிய முக்கிய வழித்தடமாக இருப்பதால், கேரளத்தின் திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், ஆலப்புழா, கோழிக்கோடு, மங்களூர் பகுதிகளில் இருந்து கிளம்பும் ரயில்களும் இந்த வழியில் நின்று செல்கின்றன.

இவையெல்லாம் புறப்படும் இடத்திலேயே புலம்பெயர் தொழிலாளர்கள் ஏறி விடுகிறார்கள். இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் இந்த ரயில்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி பயன்படுத்துவது என்றாலும் கூட்ட நெரிசலில் தான் பயணம் செய்யவேண்டி உள்ளது.

வசதியின்றி சிக்கி தவிக்கும் வடமாநிலத்தவர்கள்:வரைமுறை இல்லாமல் தங்கள் ஊருக்கு சென்றால் போதும் என்ற எண்ணத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொள்கிறார்கள். கட்டுப்பாடில்ல்லாமல், அதிக எண்ணிக்கையில் ஏறும் இவர்களால் ரயில் பெட்டிகள், கழிப்பறை எதுவும் தூய்மை செய்யப்படுவதில்லை.

தீபாவளி, சாத்பூஜா பண்டிகைக்கு திருப்பூரில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் தொழிலாளர் இடம்பெயர்வார்கள் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் திருப்பூரிலிருந்து பயணிக்க கூடிய புலம்பெயர் வடமாநில தொழிலாளர்களுக்கு கிடைத்ததோ மூன்று சிறப்பு ரயில்கள் தான். இதில் எப்படி ஒரு லட்சம் பேர் பயணிக்க முடியும்? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு திருப்பூர் வழியாக வடமாநிலங்கள் செல்லக் கூடிய ரயில்களில் இடம்பிடிக்க மூட்டை முடிச்சுகளுடன் தொழிலாளர்கள் திரண்டனர். ஆனால் இந்த எண்ணிக்கையை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ரயில்வே நிர்வாகம் புலம்பெயர் தொழிலாளர்களை அவதிக்குள்ளாகிறது என வடமாநிலத்தவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து திருப்பூரை சேர்ந்த வடமாநில தொழிலாளர் கூறுகையில், “திருப்பூரில் வடமாநிலங்கள் பலவற்றில் இருந்து தொழிலாளர்கள் வந்து பணியாற்றுகிறார்கள். எனவே மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களுக்கு கூடுதல் வாராந்திர ரயில்களை இயக்க வேண்டும்.

இப்போது இருக்கும் ரயில்களை இரு மடங்காக்கினால் கூட போதாது. அந்தளவுக்கு இங்கு கூட்டம் ரெகுலராகவே வந்து செல்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பல ஆயிரக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணிக்கிறார்கள். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாகவும், பின்னதாகவும் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களுக்கு தினசரியும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்” என ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், “ வடமாநில தொழிலாளர்கள் பண்டிகைக்கு சென்றால் குறைந்தது 10 நாட்கள் கழித்து தான் திரும்பி வருவார்கள். எனவே அவர்கள் எண்ண்க்கைக்கு தகுந்தார் போல சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். வருகிற திங்கள் முதல் பின்னலாடை நிறுவனங்கள் முழுமையாக செயல்பட உள்ள நிலையில், வடமாநில தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டியது அரசின் பொறுப்பு” என்றார்.

Last Updated : Nov 16, 2023, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details