கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் சூழ்நிலையில் முகக் கவசங்கள் தயாரிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்த திருப்பூர் மாவட்டம், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக முகக்கவசங்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது.
ஆம், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களின் உதடு அசைவுகளைக் கொண்டே அவர்கள் சொல்லவரும் கருத்துகளைத் தெரிந்துகொண்டு வருகின்றனர். முகக்கவசம் அணியும்போது அடுத்தவர்கள் சொல்வதை புரிந்து கொள்வதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வித இடையூறு ஏற்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்ட திருப்பூர் தொழில் துறையினர், தற்போது டிரான்ஸ்பரன்ட் முகக்கவசங்களை தயாரித்து வருகிறது.
இந்த முகக்கவசத்தின் மையப்பகுதியில், அதை உபயோகிப்பவரின் வாய்ப்பகுதி வெளியே தெரியும் வகையில், பாலிபுரோபலின் கவரை வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு, அவர்களது வாய் அசைவும் மற்றவர்களுக்கு நன்கு தெரியும். தற்போது இந்த வகை முகக்கவசம் தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வகை முகக்கவசங்களைத் தயாரிப்பதில், தங்களுக்கு மன நிறைவு இருப்பதாகவும்; இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.