கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல், திருப்பூரில் செயல்பட்டு வந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும் அவற்றை சார்ந்த நிறுவனங்களும் மூடப்பட்டு கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகின.
இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆறாம் தேதி முதல் 50% ஊழியர்களுடனும் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் செயல்பட அரசு அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் பணிபுரியத் தொடங்கிய பின்னலாடை நிறுவனங்கள், பனியன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து பணிபுரிந்த நிலையில், தற்போது மருத்துவ ஆடைகள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளன. மருத்துவர்களுக்குத் தேவையான முழு கவச உடைகள், முகக்கவசங்கள் ஆகியவற்றை தயாரித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இந்நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன.
இதனிடையே, ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் முகக்கவசங்களுக்கான தேவை எதிர்ப்பாராத விதமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்தப் பின்னலாடை நிறுவனங்கள் முகக்கவசங்கள் தயாரிப்பில் உற்சாகமாகக் களமிறங்கியுள்ளன.
குறிப்பாக சென்ட்டியல் எனும் பின்னலாடை நிறுவனம் பொதுமக்களைக் கவரும் வகையில் முகக்கவச தயாரிப்பில் சில புதுமைகளை புகுத்தி உள்ளது. துணியால் தயாரிக்கப்படும் இவற்றில், நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் முகங்கள் பதிந்த முகக்கவசங்கள், நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபல காமெடி வசனங்கள் பதிந்த முகக்கவசங்கள், இளைஞர்களை ஈர்க்கும் குறியீடுகள் பதிந்த முகக்கவசங்கள் என புதுமையான வகையில் கண்கவர் முகக்கவசங்களை தயாரித்து வருகின்றன.
ஏற்கனவே இந்த முகக்கவசங்கள் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இவற்றின் உற்பத்தியை பின்னலாடை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. மேலும் ஆர்டர்களைப் பொறுத்து உற்பத்தியை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க :மீண்டும் செயல்பட தொடங்கிய திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்!