விருதுநகர் மாவட்டம் முதல் கோவை மாவட்டம்வரை 765 கி.வோ மின் பாதை புதியதாக அமைக்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே சங்கரண்டாம் பாளையம் கிராமத்தில் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் மின்கோபுரம் அடிதளம் அமைக்கும் பணிகள் செய்ய கடந்த 23ஆம் காரில் அலுவலர்கள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த அப்பகுதி விவசாயிகள் அவர்களிடம், இங்கு வேலை செய்ய மாவட்ட ஆட்சியரின் அனுமதி கடிதம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அலுவலர்கள் கிளம்பியபோது அவர்கள் வந்த காரின் டயரில் காற்று இல்லாததைக் கண்டு அலுவலர்கள் ஆவேசம் அடைந்து விவசாயிகள் மீது ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில், காவல் துறையினர் 19 விவசாயிகள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.