பல்லடம் கொலை சம்பவம்: முக்கிய குற்றவாளி மருத்துவமனையில் அனுமதி... திருப்பூர்: பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு செந்தில்குமார் என்பவரின் வீட்டிம் அருகே உள்ள தோட்டத்தின் வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட போது, அவரது குடும்பத்தார் மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினம்மாள் ஆகிய 4 பேரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
அதைத் தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொலை நடந்த இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் 2 நாட்களுக்கு முன்பு இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தப்பி ஓட முயன்றதில் கால் முறிவு ஏற்பட்டு, தற்போது சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து திருப்பூர், கோவை மற்றும் தென் மாவட்டங்களில் வழக்கில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்கின்ற ராஜகுமாரின் தந்தை ஐயப்பன் என்பவரை நேற்று (செப். 6) மாலை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வெங்கடேஷ் என்கின்ற ராஜ்குமார் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சோனை முத்தையா ஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைய வந்ததாத கூறப்படுகிறது.
அப்போது அவர்களை பல்லடம் போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் இதுகுறித்து எதுவும் சொல்லாமல் போலீசார் மவுனம் காத்து வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் வெங்கடேஷ் என்கின்ற ராஜ்குமார் இரண்டு கால்களிலும் கட்டுப்போட்ட நிலையில் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவரது கால்கள் உடைந்திருப்பதாக தெரிகிறது. ஆனால் எதனால் கால்கள் உடைந்தது என்ற விவரம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. வெங்கடேசன் என்ற ராஜ்குமாரின் கால்கள் எப்படி உடைந்தது என காவல்துறையிடம் கேட்டபோதும் பதில் தர மறுத்துள்ளனர். இதனால் பல்லடம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. இன்னும் சோனை முத்தையா என்கிற விஷால் குறித்து போலீசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு குறித்த மேலும் பரபரப்பு தொடர்கிறது.
இதையும் படிங்க: "பாஜக - அதிமுக உறவு கணவன், மனைவி உறவு போன்றது.. குடியிருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்காத சீமான்..." - எச்.ராஜா விளாசல்!