திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (28). டைல்ஸ் தொழிலாளியான இவரது மனைவி புவனேஸ்வரிக்கு (25), கருவுற்ற ஆறு மாதங்களிலேயே பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலமாக அவருக்கு ஆண் குழந்தைப் பிறந்தது.
குறைமாதத்தில் பிறந்ததால் குழந்தையின் எடை 550 கிராம் மட்டுமே இருந்தது. இதையடுத்து குழந்தையின் உடல்நலம் காக்க அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மூச்சுத்திணறலை தவிர்க்க வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டது. நுரையீரலை பலப்படுத்தும் வகையிலும், வளர்ச்சிக்காகவும் மருந்துகள் வழங்கப்பட்டன.
தாய்ப்பால் அருந்துவதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இந்த சிகிச்சை கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வழங்கப்பட்டது. தற்போது குழந்தையின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் எடை 1.5 கிலோ வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து, அக்குழந்தையை மருத்துவர்கள் பெற்றோருடன் இன்று (அக்டோபர் 21) அனுப்பி வைத்தனர்.
550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்! முன்னதாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் 750 கிராம், 850 கிராம் முறையே குறைந்த எடையில் பிறந்த குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 550 கிராம் எடையில் பிறந்த குழந்தை காப்பாற்றப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்தக் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதையும் படிங்க:டெல்லி - பெங்களூரு: விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்...!