வாசல்:
திருப்பூர் மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியையும், தாராபுரம்(தனி), அவினாசி (தனி) ஆகிய தனித்தொகுதிகள் உட்பட, காங்கேயம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
தொகுதிகள் உலா :
தாராபுரம் (தனி): ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனித் தொகுதியாக இருந்து வருகிறது தாராபுரம். அமராவதி ஆறு ஓடும் பகுதி. விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட தொகுதி. ஆடு, மாடு வளர்ப்பு, கறிக்கோழி உற்பத்தி உப தொழில்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் விதை நெல் தேவையைத் தாராபுரம் விதைப் பண்ணை பூர்த்தி செய்கிறது.
தொகுதியில் தொழில் வாய்ப்புகள் இல்லாததால், இளைஞர்கள் வேலைக்காகத் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். முருங்கை விளைச்சல் அதிகமுள்ள மூலனூரில் முருங்கையைப் பதப்படுத்தும் தொழிற்சாலை, தாராபுரத்தில் தக்காளி சாறுபிழியும் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும்; அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும்; குளத்துபாளையத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறந்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தொகுதியில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்பன தொகுதிவாசிகளின் முக்கிய கோரிக்கைகளாகும்.
காங்கேயம்:தொகுதிகள் மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தொகுதி. கீழ்பவானி, பரம்பிகுளம் ஆழியாறு வாயிலாக பாசனம் பெறுகிறது. விவசாயம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் பருப்பு உலர் களம், கைத்தறி, விசைத்தறி நெசவு ஆகியவை முக்கியத் தொழில். இங்கு 700க்கும் அதிகமான தேங்காய் எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு அரசு விதித்துள்ள 5 விழுக்காடு 'வாட்' வரி, 1 விழுக்காடு 'செஸ்' வரி விதித்துள்ளது. இதனால் அந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும். நலிவடைந்து வரும் கைத்தறி, விசைத்தறி தொழிலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; காங்கேயம், வெள்ளக்கோயில் கிராமச் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்; பிஏபியின் அணையில் இருந்து வட்டமலைகரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும்; இதனால் விளைநிலங்கள் பயனடைவதுடன், நிலத்தடி நீரும் அதிகரிக்கும் என தொகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்கினறனர் தொகுதிவாசிகள்.
அவினாசி (தனி):அதிக ஆண்டுகளாக தனித் தொகுதியாக இருக்கிறது அவிநாசி. விவசாயம் பிரதானமான தொழில். அவிநாசி வட்டாரத்தில் விசைத்தறி, பம்பு செட் உற்பத்தி, புதிதாகப் பின்னலாடை தொழிலும் நடைபெறுகின்றன. அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் ஆகிய இரண்டும் இங்குள்ள புகழ் பெற்ற கோயில்களாகும்.
திருமுருகன் பூண்டியைப் புராதனமான நகரமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இங்கு ஒரு சிற்பக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும்; அவிநாசியை இரண்டாகப் பிரித்து சேவூரை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்று அமைக்கப்பட வேண்டும்; சேவூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், அவிநாசியை நகராட்சியாக்குதல், விசைத்தறி தொழில் பேட்டை, குளம் குட்டைகளைத் தூர்வாருதல், புராதன கோயில்களை புனரமைக்கப்படுதல் வேண்டும் என்பன தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்.
திருப்பூர் வடக்கு:தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் பெரிய தொகுதி. மாநகராட்சி பகுதிகளையும், அதனை ஒட்டிய கிராமப்புறங்களையும் உள்ளடக்கிய தொகுதி. விவசாயம், பின்னலாடைத் தொழில், பாத்திரம் உற்பத்தி முக்கியத் தொழிலாக உள்ளன.
தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்டப்பட்டு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாதது, தொகுதிவாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சி பகுதிகளில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பின்னலாடை தொழில் துறையினர் சார்பில், வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள், மகளிர் விடுதிகள் கட்டிக் கொடுக்க வேண்டும்; பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; ஊத்துக்குளி, கொங்குப் பிரதான சாலைகளில் போக்குவரத்து சீரமைப்பு, தேக்கமடைந்து நிற்கும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன தொகுதி மக்களின் நிறைவேற்றப்படாத நீண்ட கால கோரிக்கை.
திருப்பூர் தெற்கு:தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பின்னர், 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதி இது. மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. மாவட்டத்தின் அடையாளங்களுள் ஒன்றான பின்னலாடை உற்பத்தி, இத்தொகுதியில் தான் அதிகம் நடைபெறுகிறது.
அதனாலேயே அதன் துணைத் தொழில்களான சாயமிடுதல், சலவை ஆலைகள், நிட்டிங், டையிங், பிரிண்டிங் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன. ஏராளமான தென்மாவட்டவாசிகள் இங்கு வசிக்கின்றனர். அவர்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களுக்கு வாக்குரிமையும் இருக்கிறது.
பழைய பேருந்து நிலையம், பல்லடம், தாராபுரம், காங்கேயம், மங்களம் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காண வேண்டும். முறையான குடிநீர் விநியோகம், நகரின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல், சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற அடிப்படை பிரச்னைகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளன.