திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவர் சந்தையில் ஆடு விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், நோய் பாதிப்பு ஏற்படாது எனவும் ஆசைவார்த்தைகளைக் கூறி மயக்கியுள்ளனர்.
எனவே இரிடியம் தர வேண்டுமென்றால் ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், முன்பணமாக ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அதனை நம்பிய சாமிநாதன், ரூபாய் ஐந்து லட்சத்தை முன்பணமாக அவர்களிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சாமிநாதனிடம் பணம் வாங்கியவர்கள் ஒரு காரில் பெரியநாயக்கன்பாளையம் வந்துள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரிடியம் காருக்குள் இருப்பதாகவும் மீதி பணம் ரூ.20 லட்சத்தை கொடுக்குமாறும் சாமிநாதனிடம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சாமிநாதன், பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.