திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த எஸ்தர் பேபி என்பவர், கடந்த 2014ஆம் ஆண்டு தனது கணவரை பிரிந்து வேலன் நகரில் உள்ள தாய் சகாயராணி, தந்தை அப்துல் காதர் ஆகியோருடன் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பாக்யராஜ் என்பவருடன் சகாயராணி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது எஸ்தர் பேபிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனது தாயை எஸ்தர் பேபி எச்சரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சகாயராணி, தனது தம்பி சேவியர் அருண், திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த பாக்யராஜ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து 2014 ஜூன் 14ஆம் தேதி எஸ்தர் பேபியை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை குடியிருந்த வீட்டுக்குள்ளேயே புதைத்தனர். பின்னர் தனது மகளை காணவில்லை என வீரபாண்டி காவல் நிலையத்தில் சகாயராணி புகார் அளித்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கொன்றில் சேவியர் அருண் கைது செய்யப்பட்டார். இதையறிந்த எஸ்தர் பேபியின் தந்தை அப்துல் காதர், சேவியர் அருண் திருப்பூர் வந்தபோதுதான் தனது மகள் காணாமல் போனதாகவும், அதனால் சேவியர் அருணை விசாரிக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.