திருப்பூர், கல்லாங்காடு, ஆதவன் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம், 'செல்ஃபோனில் படம் பார்க்கலாம்' என்று ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், காவல்துறையினர் சுப்ரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. குற்றவாளி சுப்ரமணிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் முருகசாமி. கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை மிரட்டி வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பும், திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. குற்றவாளி முருகசாமிக்கு, போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு இதேபோல், பெருந்தொழுவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளி கார்த்திக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.