திருப்பூர் மாவட்டம் அப்பாச்சி நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக திருட்டுகள் அதிக அளவில் நிகழ்ந்த வண்ணம் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காவல் துறையினரிடம் புகாரளித்தும் வந்துள்ளனர்.
தொடர் திருட்டில் ஈடுபட்ட 15 வயது சிறுமி கைது! - சிசிடிவி மூலம் சிக்கிய சிறுமி
திருப்பூர்: அப்பாச்சி நகரில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த 15 வயது சிறுமியை அப்பகுதி மக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், அப்பாச்சி நகர் பகுதியில் அக். 10ஆம் தேதியன்று 15 வயது சிறுமி ஒருவர் யாரும் இல்லாத நேரம் பார்த்து வாகனத்தை திருட முயன்றுள்ளார். அப்போது ஆட்கள் வருவதைக் கண்டதும் அந்த இடத்தை விட்டுச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அப்பகுதி மக்கள் அந்தச் சிறுமியை தேடிவந்துள்ளனர்.
இதனிடையே, இன்று அப்பகுதியில் உள்ள மற்றொரு தனியார் பின்னலாடை நிறுவனத்தில் திருட முற்படும்போது அப்பகுதி பொதுமக்கள் அந்தச் சிறுமியை கையும் களவுமாகப் பிடித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கையும் களவுமாகச் சிக்கிக்கொண்ட சிறுமியை காவல் துறையினர் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.