திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பருத்திக்கொட்டை, புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இவரது சகோதரர் மோகன்ராஜ் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க. கிளை தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 3ஆம் தேதி இரவு மோகன்ராஜ் படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த சோனை முத்தையா ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார் மற்றும் மோகன்ராஜை வெட்டி கொலை செய்தனர்.
மேலும், அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி மற்றும் மனைவி ரத்தினாம்பாள் ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் வெங்கடேசன், சோனை முத்தையாவை 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.