திருப்பூர் காங்கேயம் சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,” விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய் பரப்புரை . தமிழ்நாட்டில் 21 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் . விவசாயிகளுக்காக எவ்வளவு மின்சாரம் செலவிடப்படுகிறது என்ற விவரத்தை மட்டுமே மத்திய அரசு கேட்டுள்ளது . மின்வாரியத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மின் விநியோக நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 90 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசு கேட்டதற்கு இணங்க மத்திய அரசு கொடுத்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்ய என்ன திட்டம் உள்ளது என்பது குறித்தே ஆலோசிக்கப்படுகிறது . விவசாயிகளுக்கான அரசாகவே மத்திய அரசு உள்ளது.
பிரதமர் மோடியின் சுயசார்பு பாரதம் என்ற திட்டம் குறித்து வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம் . அதற்காக காணொலி வாயிலாக மின்னணு பேரணிகளையும் நடத்தவுள்ளோம். வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டுள்ளனர். வடமாநிலங்களில் இருந்து திரும்பும் தமிழர்களை திருப்பூர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். முகக்கவசம், மற்றும் முழு உடல் கவசங்கள் தயாரிப்பில் திருப்பூர் முன்னிலை வகிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு மார்ச் 24 முதல் கட்டணம் அளிக்கப்படுமா?