கால் வைக்கவும் இடமில்லை..மூச்சு விடவும் இடமில்லை; புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரயில் வசதி செய்ய கோரிக்கை திருப்பூர்:ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் ரயில், பேருந்து உள்ளிட்டவைகள் மூலம் பயணித்து வருகின்றனர். அந்தவகையில், திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனிகள் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றிவரும் வடமாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று (நவ.11) ஒரே நாளில் பயணித்ததால் கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்டது.
பனியன் தொழில் காரணமாக, திருப்பூர் மாநகரில் வெளிமாவட்டங்களில் இருந்தும், வடமாநில பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள் குவிகின்றார்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏறக்குறைய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தங்கள் சொந்த மாநிலங்களை விட அதிக சம்பளம் கிடைப்பதால், திருப்பூர் வந்து தங்கி பணியாற்றும் இத்தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்கிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு இடம்பெயர்ந்து சென்று விட்டு, தீபாவளி முடிந்தப் பின்பு திருப்பூருக்கு திரும்புவர்.
அந்த வகையில், நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர். குறிப்பாக ஒடியா, ஜார்க்கண்ட், உத்திரப்பிரேதசம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு செல்ல அவர்கள் அதிகளவில் ரயில் நிலையம் வந்தனர். ஆலப்புழாவில் இருந்து தண்பாத் செல்ல (dhanbad to alappuzha train) திருப்பூரில் நின்று செல்லக்கூடிய ரயிலில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். வழக்கமாகவே நிற்கக்கூட இடமில்லாமல் வரும் இந்த ரயில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிக நெரிசலான நிலையில்தான் வந்தது.
இதனிடையே, திருப்பூரில் இருந்தும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் ஏறியதால் நிற்கக்கூட இடமமில்லாத நிலையில் தொழிலாளர்கள் பயணித்தனர். திருப்பூர் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரப்தி சாகர் ரயில் (Rapti Sagar Express) மற்றும் புதுடெல்லி ரயில்களுக்கு கூட்டம் ஆயிரக்கணக்கில் காத்திருக்கிறது. தீபாவளி கொண்டாட செல்லும் மனநிலையில் வடமாநில தொழிலாளர்கள் பெரும் கூட்டமாக சொந்த ஊருக்கு பயணிக்கின்றனர். இதில், மிகப்பெரும் கொடூரமாக இடவசதி இல்லாமல் அவதியுடன் செல்லும் நிலையிலும் ஊர் சென்றால் போதும் என்று செல்கிறார்கள்.
அவர்கள் பண்டிகை முடிந்து சில நாட்களில் திரும்பி வருவார்கள். தொழில் நகரமான திருப்பூர், கோவையில் இருந்து லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தாலும் அவர்களுக்கு என்று இங்கிருந்து கிளம்பக்கூடிய சிறப்பு ரயில்கள் இல்லாதது அவர்களது பயணத்தை பெரும் அவஸ்தைக்கு ஆளாக்குகிறது. எனவே, தென்னக ரயில்வே தொழிலாளர்கள் திரும்பி வருவதற்கு வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க:தீபாவளி சிறப்பு பேருந்து: 2 நாட்களில் 3 லட்சம் பேர் பயணம்.. போக்குவரத்து துறை தகவல்!