திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குழந்தைபாளையம் பகுதியில் வசித்துவரும் சம்பத் குமார் என்பவருக்குச் சொந்தமாக குண்டடம் ஒன்றியம் மானூர்பாளையத்தில் 4.40 ஏக்கர் விவசாய நிலத்தில், புகளூரிலிருந்து திருச்சூர்வரை செல்லும் 320/கே.வி உயர்மின் கோபுரப்பாதை அமைக்க பவர் கிரிப் ஆஃப் இந்தியா நிறுவனம் அளவீடு செய்துள்ளது.
சம்பத் குமாரின் நிலத்தின் மொத்த நீளம் 800 அடி. அந்த நிலத்தின் நடுவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. அப்படி அமைந்தால் நிலத்தை எதற்கும் பயன்படுத்த முடியாது எனக் கூறிய சம்பத் குமார், இழப்பீடு வழங்க வலியுறுத்தி குடும்பத்துடன் கடந்த சில தினங்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுடன் உயர் மின்னழுத்த கோபுர கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் ஈசன், கொள்கைபரப்புச் செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் முத்து விசுவநாதன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.