நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் ஸ்விகி நிறுவனம், தற்போது கரோனா தடைக்காலத்தைக் காரணம் காட்டி, டெலிவரி ஊழியர்களின் மதிப்பூதியத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது. இதனால் ஊரடங்கின்போதும் நாள்தோறும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று உணவுப் பொட்டலங்களை டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்விகியின், திருப்பூர் நிறுவனத்திலும் 150க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். கடந்த 2 நாள்களுக்கு முன்பு இவர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதால், தங்களது வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து, தவித்துவருவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நிறுவனத்தில் முறையிட்டபோதும், இரண்டொரு நாட்களில் பிரச்னையைச் சரிசெய்வதாக உறுதியளித்து, இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.