திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தெருநாய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. வீதிகள்தோறும் மிரட்டும் தெருநாய்களால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வேலைக்குச் செல்பவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
சில இடங்களில் நாய்கள் கடித்துக் குதறியதில் பெரும் காயம் அடைபவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த நவ.3ஆம் தேதி ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமியை 6க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் குதறின. இதில் காயமடைந்த அந்த சிறுமி சிகிச்சைக்குப் பின் மீண்டிருக்கிறார்.
இப்படி தொடரும் தெரு நாய்க்கடியால், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்லவே மக்களிடம் அச்சம் நிலவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தெருநாய்களால் மிகவும் பயந்து கொண்டே செல்லும் நிலை உள்ளது. காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்குச் செல்பவர்கள் வரை தெருநாய்க்கடியால் அவதிப்படுகின்றனர்.
திருப்பூர் வாலிபாளையம், ராயபுரம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பெரிச்சிபாளையம், தென்னம்பாளையம், ராயபுரம், குமார் நகர், பிச்சம்பாளையம் உள்பட மாநகர வீதிகளில் தலா 10க்கும் மேற்பட்ட நாய்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.