திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வங்கியின் பக்கவாட்டு ஜன்னலை உடைத்து வங்கியின் உள்ளே இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட எஸ்பி சாம்சன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் வங்கியில் இருந்து 18 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சுமார் 500 சவரன் நகைகள் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் வங்கியில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து ஆடுகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதனிடையே வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரிந்து வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று வங்கி முன்பு குவிந்தனர். தங்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வங்கி அலுவலர்களுடன் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.