தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் கேள்விக் குறியாகும் பின்னலாடை நிறுவனங்கள்..! வரலாறு காணாத வீழ்ச்சி சந்திக்கும் நிறுவனங்கள்.. திருப்பூர் பின்னலாடை தொழிலின் நிலை என்ன? - how war affect tiruppur knitwear industries news

Tirupur knitwear industries: ஏற்றுமதியில் கொடி கட்டி பறந்த திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள், தற்போது வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருவதன் காரணங்கள் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு...

வரலாறு காணாத சரிவை காணும் திருப்பூர் பின்னலாடை தொழில்
வரலாறு காணாத சரிவை காணும் திருப்பூர் பின்னலாடை தொழில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 10:45 PM IST

திருப்பூர்: பனியன் தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் பிரசத்தி பெற்ற நகரமாக இருப்பது திருப்பூர். சுமார் 1925ஆம் ஆண்டுகளில் காதர்பேட்டையில் உள்ள நாடக கொட்டகைக்காக திரைச்சீலை வாங்குவதற்கு, திருப்பூரை சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் மற்றும் சத்தார் சாகிபு ஆகியோர் சென்ற போது, கையினால் சுற்றி துணி தயாரிக்கும் இயந்திரம் மற்றும் அவர்கள் துவங்கிய பின்னலாடை நிறுவனம் தான், திருப்பூரில் தொழிற்சாலைகளுக்கான அடித்தளம் என திருப்பூர் வாழ் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்த திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள், 1980களில் 50 கோடி ரூபாய் அளவுக்கு, உலகில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன. அதேபோல் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் 36 ஆயிரம் கோடி ரூபாயை கடந்திருக்கிறது திருப்பூரின் ஏற்றுமதி.

கோவை மாவட்டத்தில், பல்லடம் தாலுகாவில் சிறிய ஊராக இருந்த திருப்பூர், தொழிற்சாலை வளர்ச்சியால் தற்போது தனி மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் வளர்ந்துள்ளது. இவ்வாறாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த தொழில்களான சாயமிடும் டையிங் தொழில், பிரிண்டிங் தொழில், எம்ப்ராய்டரி தொழில், ஸ்டீமிங், காம்பாக்டிங் உள்பட 95 சதவீத தொழிற்சாலைகள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன.

இப்படி ஒரே ஊரில் பனியன் உற்பத்தி சார்ந்த தொழில்கள் குவிந்து உள்ளதால், திருப்பூரில் பின்னலாடை தொழில் பெரிய அளவில் வளர சாதகமாக அமைந்தது. ஆனால் தற்போது திருப்பூரின் பனியன் தொழிலுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெரும் சிக்கல் உருவாகி உள்ளது. கரோனா பேரிடர் காலங்களுக்கு பின்னர் கஷ்டப்பட்டு மீண்டு வந்த பனியன் தொழில், தற்போது நூல் விலை உயர்வு, ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற பிரச்சினைகள் காரணமாகவும், மேற்கத்திய நாடுகளில் மக்களிடம் ஆடை வாங்கும் சக்தி குறைவு போன்றவையால் திருப்பூர் ஆடை ஏற்றுமதியில் பெரிய முட்டுக்கட்டையை போட்டு முடக்கி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியின் சராசரி 15 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும். ஆனால் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அளவுக்கு நடப்பாண்டில் குறைந்து விட்டதாக திருப்பூரின் தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "திருப்பூரில் பின்னலாடை தொழில் பெரும் அளவு நலிந்து உள்ளது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக இருக்கக் கூடிய ஜவுளித் தொழிலுக்கு தனியாக அமைச்சர் இல்லை. சிறு குறு தொழில் நிறுவனங்கள் 70 சதவீத அளவுக்கு, தொழிலை விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் அளித்த பேட்டி:

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் அளித்த பேட்டி

மேலும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர், இஸ்ரேல் - பாலத்தீன் இடையே நடைபெறும் போர் போன்ற சூழல்களால் திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்று உள்ளது" என்று தெரிவித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அளித்த பேட்டி:

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா சண்முகம் அளித்த பேட்டி

மேலும் பனியன் தொழில் நிறுவன உரிமையாளர் அங்கமுத்து என்பவர் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளில் திருப்பூருக்கு தொழிலாளியாக வந்த பலரும் இன்று முதலாளியாக உருவாக்கிய ஊர் இது. சினிமாவில் பார்ப்பது போல இங்கு தொழில் வளர்ச்சியால் மக்கள் வாழ்க்கை முன்னேற்றம் கண்டது. ஆனால் இப்போது வரலாறு காணாத அளவில் தொழில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த தொழிலை சிரமத்தில் இருந்து காப்பாற்ற அரசுகள் முன் வரவேண்டும்" என்று தெரிவித்தார்.

தொழில் நிறுவன உரிமையாளர் அளித்த பேட்டி:

தொழில் நிறுவன உரிமையாளர் அங்கமுத்து அளித்த பேட்டி

இதையும் படிங்க: ETV Exclusive: ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு விவகாரம் என்ஐஏ-க்கு மாற்ற உள்ளதாக பிரத்யேக தகவல்!

ABOUT THE AUTHOR

...view details