திருப்பூர்:திருப்பூர் அருகே உள்ள முத்தணம்பாளையம் பகுதியைச்சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிறுமியின் பெற்றோர், அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார்.
அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனையில், அந்த சிறுமி கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. ஆகையால் மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் அதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமி கர்ப்பமாக இருந்ததும், கருவை கலைக்க கோயில்வழி முத்தணம்பாளையம் சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் ரூ.1000க்கு மாத்திரை வாங்கி கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
பின்னர் போலீசார் இந்தச் சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கவுரி, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன், தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு மற்றும் இணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராமசாமி ஆகியோர் மருந்து கடைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் - கவிதா தம்பதியினர் மருந்துக்கடை நடத்தி வந்ததும், செட்டிபாளையம் பகுதியில் இன்னொரு மருந்துக்கடை நடத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் மருந்துக்கடையில் ஆய்வு செய்த போது, அங்கு காலாவதியான மருந்துகள் மற்றும் மாதிரி மருந்துகள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.