கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை, திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் புகுந்து கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர். அதன்பின் சில மணி நேரத்திலேயே அவரை உடுமலை அருகே உள்ள தளி பகுதியில் கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.
இச்சம்பவத்தில் தப்பியோடிய கடத்தல் கும்பலை காவல் துறையினர் கடந்த மூன்று நாள்களாக தேடி வந்த நிலையில், பிரதீப் (வயது 39), அருண் குமார் (வயது 23), சுரேந்திரன் (வயது 27), வினோத் (வயது 20),செல்வ கணபதி (வயது 23), தாகா (வயது 21),தேவ ராஜுலு (வயது 55) ஆகிய ஏழு பேரை இன்று (செப்.25) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 447இன் கீழ் அத்துமீறல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், ஆள் கடத்தல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.