திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100 விழுக்காடு தனியார் பங்களிப்புடன் நடைபெற்றுவரும் பள்ளிக் கட்டடப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு !
திருப்பூர்: பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் நடைபெறும் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.
அப்போது விழாவில் பேசிய செங்கோட்டையன், ’அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம். அது பெரிய அளவில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறு சிறு உதவிகளைக்கூட செய்யலாம். அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை என்றால் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம். பெரும்பாலான பள்ளிகளில் நவீன கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது’என்றார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தற்போது உள்ள பாடத்திட்டங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு வைக்கப்பட்டது. இதில் போதுமான ஆசிரியர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.