தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கி. இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவருடன் மதுரையைச் சேர்ந்த சங்கர் என்பவரும் அதே வீட்டில் தங்கியுள்ளார். இவர்கள் இருவரும் பனியன் நிறுவனவத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு காவல்துறையினர், வீட்டினுள் இருந்த தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்றைக் கண்டெடுத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், சடலாமாக கிடந்த நபர் இசக்கி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து இசக்கியுடன் தங்கியிருந்த சங்கரை காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது, சங்கர் வேறொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.