தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் கால் டாக்ஸி டிரைவர் - பார்க்கிங் பெண் ஊழியர் இடையே தகராறு.. ரயில்வே போலீசார் அடித்ததாக குற்றச்சாட்டு! - திருப்பூர் ரயில் நிலையம்

Tiruppur taxi driver Protest: திருப்பூர் ரயில் நிலையத்தில் தனியார் டாக்ஸி ஓட்டுநருக்கும், டூவீலர் ஸ்டாண்டில் பணியாற்றி வரும் பெண்ணிற்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tiruppur taxi driver Protest
திருப்பூர் கால் டாக்ஸி டிரைவரை தாக்கிய பெண்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 6:54 PM IST

திருப்பூரில் கால் டாக்ஸி டிரைவர் பார்க்கிங் பெண் ஊழியர் இடையே தகராறு

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள வாகன நிறுத்துமிடமானது, தனியாருக்கு குத்தகை விடப்பட்டு, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.

அதேபோல், மூன்று வருடங்கள் குத்தகையின் அடிப்படையில், தனியார் டாக்ஸிகளானது மற்றொருபுறம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இன்று (டிச.19) தனியார் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் டாக்ஸி நிறுத்துமிடத்தை விட்டு, மற்றொரு இடத்தில் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் டாக்ஸி ஓட்டுநருக்கும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பணியாற்றி வரும் பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவலர், ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஏரியாவில் பணியாற்றி வரும் பெண்ணிற்கு ஆதரவாக பேசியதோடு, கால் டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கால் டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கிய ரயில்வே காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களது டாக்ஸிகளுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் டாக்ஸி ஓட்டுநர் கணேஷ், “தங்களின் சக டாக்ஸி ஓட்டுநர் காலையில் ரயில் நிலையத்தில் வண்டியை நிறுத்துவதற்காக வந்துள்ளார். தங்களுடைய புக்கிங்கில் வாடிக்கையாளர் வராததால், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் டாக்ஸியை நிறுத்திவிட்டு, வாடிக்கையாளர்களை ஏற்றுவதற்காக ரயில் நிலையத்தின் உள்ளே சென்று உள்ளார்.

அப்போது, பார்க்கிங்கில் டோக்கன் போடும் பெண் வாகனத்தை இங்கு நிறுத்தக்கூடாது, வாகனத்தை வெளியே நிறுத்துமாறு கூறி உள்ளார். அப்போது சக டாக்ஸி ஓட்டுநர்கள் இரண்டு பேர் வாகனத்திற்கு டோக்கன் போடுமாறு கூறி உள்ளனர்.

ஆனால், டோக்கன் போடாமல் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், டாக்ஸி ஓட்டுநரைத் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ரயில் நிலைய காவலர் பெண்ணிடம் விசாரிக்காமல், ஓட்டுநரை மட்டும் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து உள்ளனர்.

பின்னர், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்வதாகக் கூறி, 3 மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து உள்ளனர். பாதிக்கப்பட்ட ஓட்டுநரைத் தாக்கிய பெண் மற்றும் ரயில் நிலைய காவலர் வெளியில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஊழியரை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர், இதுதான் நியாயமா?” என்றும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில் நிலைய காவலர் மற்றும் பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் கால் டாக்ஸி ஓட்டுநரையும், டூவீலர் ஸ்டாண்டில் பணியாற்றி வரும் பெண்ணையும் அழைத்து சமரசம் செய்ததையடுத்து, இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. டாக்ஸி ஓட்டுநர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் திறப்பு: டிசம்பர் 22 முதல் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும்..!

ABOUT THE AUTHOR

...view details