இந்தாண்டின் 37ஆவது வணிகர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சுதேசி வணிக பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்காக, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், “தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக இந்த ஆண்டு மே 5ஆம் தேதி 37ஆவது வணிகர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சுதேசி வணிக பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். அதற்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் மூலமாக பரப்புரை இயக்கம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் மேல் சபை, வணிகர் நல வாரியம் அமைக்க வேண்டும். வியாபாரிகள் பொதுமக்களிடமிருந்து பெற்ற ஜிஎஸ்டி வரியை தொடர்ந்து செலுத்தி வரும் நிலையில், அதில் ஒரு பகுதியை வியாபாரிகளுக்கு ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும்.