பல்லடம் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த வெங்கடேஷ் என்பவரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், தனது தாய், மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி சிலர், மோகன்ராஜ் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மோகன்ராஜ், ஏன் வீட்டருகே அமர்ந்து மது குடிக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது மது குடித்தவர்களுக்கும் மோகன்ராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி சென்ற நபர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகன்ராஜை சரமாரியமாக வெட்டினர். அதை தடுக்க வந்த மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், சகோதரர் செந்தில்குமார் ஆகியோரையும் அந்த நபர்கள் கொடூரமாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது, வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா எனத் தெரியவந்தது.
குறிப்பாக வெங்கடேசன் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளக்கிணறு பகுதியில், மோகன்ராஜ் உணவகத்திற்கு எதிரே இறைச்சிக்கடை வைத்திருந்ததும், மோகன்ராஜ் தனது உணவகத்தை மற்றொரு நபருக்கு வாடகைக்கு விட்டிருந்த நிலையில், வாடகை எடுத்த நபர் வெங்கடேசிடம் கோழி இறைச்சி பெற்று பணம் தரவில்லை என்றும் அது சம்பந்தமாக மோகன்ராஜ்க்கு சொந்தமான சிலிண்டர் மற்றும் கோழி கூண்டுகளை வெங்கடேஷ் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் மோகன்ராஜ் மற்றும் வெங்கடேஷிற்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கடேஷ் கோழிக்கடையை எடுத்துவிட்டு, மோகன்ராஜின் தம்பி செந்தில் குமாரிடம் ஓட்டுநராக இரண்டு மாதம் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
இதில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்துவை போலீசார் கைது செய்த. மேலும் வெங்கடேஷ் மற்றும் சோனைமுத்து ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தான் தப்பிக்க முயன்ற வெங்கடேஷை சுட்டுப் பிடித்தாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அறிவிப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் பொன்முடி