திருப்பூர்:பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு, குறைத்தோட்டம் என்ற பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தவிடு, புண்ணாக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்கிற குட்டி, செந்தில்குமாரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டுநராக பணியாற்றி உள்ளார்.
அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வெங்கடேசனை பணியில் இருந்து செந்தில் குமார் நீக்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று(செப். 4) செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகே அமர்ந்து வெங்கடேசன் அவரது கூட்டாளிகள் 2 பேர் மது அருந்தி அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது, எதற்காக எங்களது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது அருந்துகிறீர்கள் என செந்தில்குமார் கேட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் செந்தில்குமாருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது வெங்கடேசன் உடனிருந்த கூட்டாளிகள் இரண்டு பேரும், தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து செந்தில்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
செந்தில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது தம்பி மோகன் மற்றும் செந்தில்குமாரின் சித்தி ரத்தினம்மாள் மற்றும் மோகனின் தாய் புஷ்பவதி ஆகியோர், செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியவர்களை தடுக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. தடுக்க வந்த 3 பேரையும் கை மற்றும் தலை பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு 3 பேர் கும்பல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் வெட்டுப்பட்ட 4 பேரும் கதறும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், கொலை செய்துவிட்டு தப்பி ஓட முயன்ற மூன்று நபர்களையும் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கொலை சம்பவம் தகவல் அறிந்து வந்த பல்லடம் டிஎஸ்பி சௌமியா தலைமையிலான காவல்துறையினர், வெட்டுப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் மற்றும் தாராபுரம், காங்கேயம், அவிநாசி மற்றும் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியோடு கொலை சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை வெட்டி கொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை முன்பு உள்ள கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். தற்போது முதற்கட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர். ஓட்டுநர் குட்டி என்கிற வெங்கடேசன், செந்தில்குமாரின் தம்பி மோகன் ராஜிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாகவும், அது தொடர்பான பிரச்சினையில் தான், திட்டமிட்டு வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டு கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன் விரோதம் காரணமாக தான் கொலை நடந்ததா அல்லது வேறெதும் காரணமா என தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், தப்பியோடிய வெங்கடேசனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடுரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை!