தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல் பங்க் காசாளரைத் தாக்கி பணம் பறிப்பு - திருப்பூரில் துணிகரம்!

திருப்பூர்: பல்லடம் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பெட்ரோல் பங்க் காசாளரிடம் இளைஞர் ஒருவர் பணம் பறித்த சிசிடிவி காட்சி பதற வைக்கிறது.

பெட்ரோல் பங்க் காசாளரைத் தாக்கி பணம் பறிப்பு
பெட்ரோல் பங்க் காசாளரைத் தாக்கி பணம் பறிப்பு

By

Published : Jul 18, 2020, 4:33 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு காசாளராக கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர். காசாளர் மணி மட்டும் இரவு அங்கேயே தங்கியிருந்தார். அலுவலகத்தின் உள்ளே மணி அசந்து தூங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை 3 மணியளவில் யாரோ கதவைத் தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்து மணி பார்த்துள்ளார்.

அப்போது, கையில் ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு, இளைஞர் ஒருவர் தனக்கு பெட்ரோல் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மணி பெட்ரோல் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், அவசரமாக கோவை செல்ல வேண்டும், வண்டி பெட்ரோல் இல்லாமல் நடுரோட்டில் நிற்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இளைஞர் பரிதாபமாகக் கேட்டதால், மணி அலுவலகக் கதவைத் திறந்து வெளியே வர முற்பட்டிருக்கிறார். அப்போது உடனடியாக உள்ளே புகுந்த அந்த இளைஞர் மணியைத் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து மற்றொரு அறைக்குள் மணியைத் தள்ளி, அலுவலகத்திலிருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தையும், சிசிடிவியில் சிக்கக் கூடாது என்பதற்காக கணினியிலிருந்து சிபியூ பெட்டியையும் எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

ஆனால், அவர் காட்சிகள் பதிவாகியிருக்கும் ஹார்ட் டிஸ்குக்குப் பதிலாக சிபியூவை தூக்கிச் சென்றதால், அங்கு நடந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியது. மேலும், வெளியிலிருந்த மற்றொரு சிசிடிவியில், வெளியில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த மற்றொரு நபருடன், அந்த இளைஞர் தப்பியோடிய காட்சி பதிவாகியிருந்தது.

பதற வைக்கும் சிசிடிவி காட்சி

"கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்", என்ற பட வசனத்தை நினைவுப்படுத்தும் விதமாக காவல் துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக கொள்ளையன் சிபியூவை தூக்கிச் சென்றாலும், காட்சிகள் அனைத்தும் வேறொரு ஹார்ட் டிஸ்க்கில் பதிவாகி, மரண பயம் காட்டிய கொள்ளையனுக்கே பயம் காட்டியிருக்கிறது.

தற்போது, காயமடைந்த மணி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பல்லடம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சிசிடிவி: பட்டப்பகலில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details