தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் இரும்பு ஆலையை நிரந்தரமாக மூடுக! - பொதுமக்கள் வலியுறுத்தல் - கருத்துக்கேட்பு கூட்டம்

திருப்பூர்: அனுப்பட்டியில் இயங்கும் தனியார் இரும்பு ஆலையால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்ற காரணத்தால் உடனடியாக அந்த ஆலையை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Anupatti steel factory issue

By

Published : Oct 4, 2019, 8:28 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்து அனுப்பட்டியில் இயங்கிவரும் தனியார் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமை வகித்தார். கிராம மக்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், தனியார் ஆலை அலுவலர்கள் என பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் ஆலையின் விரிவாக்கத் திட்ட வரைவு மக்களுக்கு விளக்கப்பட்டது.

இதன்பிறகு ஒவ்வொருவராக தங்களது கருத்துகளை அலுவலர்களிடம் தெரிவித்தனர். இதில் கிராம மக்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கையில், ''தனியார் இரும்பு ஆலையால் கடந்த ஐந்து ஆண்டில் எங்கள் கிராமத்தில் கால்நடைகள் பெருமளவில் உயிரிழந்திருக்கின்றன. இந்த ஆலையால் எங்கள் மண்ணின் தரம் கெட்டு, விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது.

மக்களும் இந்த ஆலையால் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்படுகிறார்கள். எங்கள் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் இரும்பு ஆலையில் கிடைக்கும் வேலைவாய்ப்பு எங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் 170 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மூவாயிரம் மக்களின் உயிரை பணயம் வைக்க வேண்டாம். ஆலையின் திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் பொய்யானவை.

அனுப்பட்டி இரும்பு ஆலையை மூட வலியுறுத்தல்

உடனடியாக ஆலையை இழுத்து மூட வேண்டும், இல்லையென்றால் எங்கள் கிராம மக்கள் அனைவரும் தங்களது குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்தனர்.

பின்னர் எழுத்துப்பூர்வமாகவும் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

முன்னதாக காந்தியின் பிறந்தநாளன்று அனுப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் அவர்கள் இதே கருத்தை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: தரகர்களின் பெயர்கள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details