கரூர் மாவட்டம், ஜவகர் பஜார் அருகே சுதந்திரப் போராட்டத் தியாகி கொடிகாத்த குமரனின் 116ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பாக திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் இளைஞர்கள் கதராடை அணிவோம், நெசவுத் தொழில் அழியாமல் பாதுகாப்போம் போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.
பின்னர் செங்குந்தர் இளைஞர் பேரவை சார்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதன் செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டும் என்றும், சமச்சீர் பாடப்புத்தகத்தில் திருப்பூர் குமரனைப் பற்றிய பாடம் இடம்பெற வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்தார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம், திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்குச் சிலை, பூங்கா, நுழைவுவாயில் ஆகியவை அமைத்துத் தரவேண்டும் என்றும் கோரிக்கைகள்விடுத்தார்.