திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்தப் பள்ளியின் சமையலர் பட்டியலினப் பெண் என்பதால், அவர் சமைத்த சத்துணவை தங்களது குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் எனக் கூறி, மாணவர்களின் பெற்றோர் அவர் சமைப்பதை தடுத்து வன்முறையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பட்டியலின சமையலரை பணியிட மாற்றம் செய்து வன்கொடுமைக்கு உறுதுணையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சேயூர் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியக்கூடிய 12 பேர் உள்பட 87 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து, அந்த பட்டியலினப் பெண் மீண்டும் அதே பள்ளியில் சமையலராக பணியமர்த்தப்பட்டார். இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி நீதிபதி சொர்ணம் நடராஜன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, “இந்த நிகழ்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறையினர், காவல் துறையினர், இந்த வழக்கின் வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பள்ளிக் குழந்தைகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, பட்டியலினப் பெண் சமைத்த உணவைச் சாப்பிட்டு சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்” என வலியறுத்தி உள்ளார்.