திருப்பூர்:திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏலச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, பணத்தை மீட்டுத் தரக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் பணமோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் கருவம்பாளையம் மாகாளியம்மன் கோயில் அருகில் தனியாருக்குச் சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் திருப்பூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் மாதச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு பல்லடம், அவிநாசி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் இருந்ததாகவும் தெரிகிறது. இதனிடையே, சீட்டில் சேர்ந்த நபர்களுக்கு முதிர்வுகாலம் முடிந்தும் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, நேற்றைய முன்தினம் (ஜன.3) நிறுவனத்துக்குச் சென்று பார்த்தபோது, நிறுவனத்தை காலி செய்தது தெரிய வந்துள்ளது.