ரஷ்யாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆசிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், மனோஜ் ஆனந்த் ஆகிய நான்கு பேரும் மருத்துவம் படித்து வந்தனர். அங்குள்ள மருத்துவப் பல்கலைக்கழக விடுதியில் தமிழ்நாடு மாணவர்களுடன் தங்கி அவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக. 7) அங்குள்ள நதிக்கரைக்கு பத்துக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுடன் சென்ற இவர்கள், நதியில் இறங்கி குளித்து விளையாடியுள்ளனர்.
அப்போது, மாணவர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்து ஸ்டீபன் அவரைக் காப்பாற்ற முயன்றார். அதில் ஸ்டீபனும் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட மேலும் இரண்டு மாணவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். இச்சம்பவத்தில், ஸ்டீபன், முகமது ஆசிக், ராமு விக்னேஷ், மனோஜ் ஆகிய நான்கு பேரும் நதியில் அடித்து செல்லப்பட்டனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு ஸ்டீபன் உள்ளிட்ட நான்கு பேரின் உடல்களும் கரை ஒதுங்கின.
இதையடுத்து, நால்வரின் உடல்களையும் மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். சக மாணவனை காப்பாற்ற முயன்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரை மட்டுமல்லாது தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.