தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரைத் தேடி அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், திணை குளம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் 'மரம்' மாசிலாமணி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரும் கிரிக்கெட் சங்கம் சார்பில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பனைக் கொட்டைகளை, அப்பகுதியில் உள்ள குளத்தைச் சுற்றி விதைத்தனர்.
'பனைமரம் வெறும் காட்சிப்பொருள் அல்ல..!' - சமூக ஆர்வலர் வேதனை - மரம் மாசிலாமணி
திருப்பூர்: நீர்நிலைகளை பாதுகாக்க திணை குளம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மரம் மாசிலாமணி 2500க்கும் மேற்பட்ட பனைமர விதைகளை விதைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் 'மரம்' மாசிலாமணி கூறுகையில், "நீர்நிலைகளை பாதுகாக்க முதற்கட்டமாக 2500க்கும் மேற்பட்ட பனங்கொட்டைகளை விதைத்துள்ளோம். ஆனால் இந்தக் குளத்தை சுற்றி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விதைகளை விதைத்தால் மட்டுமே அதில் 8000 மரக்கன்றுகள் வரும். நம்முடைய மாநில மரமான பனை மரத்தை நம் முன்னோர்கள் வைத்ததை மட்டுமே நாம் பார்த்து வியந்துக் கொண்டிருக்கிறோம். பனை மரங்களை பயன்பாட்டிற்காக விட்டு விடுகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் இதற்கு பின்வரும் சந்ததியினர் பனை மரத்தை செய்தித்தாளில் மட்டுமே பார்க்கக் கூடும். அது மட்டுமல்லாமல் நீர்நிலைகளை பாதுகாக்க வீட்டிற்கு ஒருவர் பனை மரம் நட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.