திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனியார் பின்னலாடை நிறுவன தொழிலாளி. இவரின் மகள் ரிதுஸ்ரீ. திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்ற இவர் 10ஆம் வகுப்பில் 461 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 490 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.
மருத்துவராக வேண்டும் என்று இளம் வயதில் இருந்தே கனவில் இருந்தார் ரிதுஸ்ரீ. கனவை நிறைவேற்றுவதற்காக நீட் தேர்வுக்கு இரவு பகல் பாராமல் பயிற்சி எடுத்து நம்பிக்கையோடு தேர்வினையும் எழுதினார். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, மருத்துவராகி விடலாம் என்று உறுதியோடு இருந்த ரிதுஸ்ரீ, எல்லோரையும் போல பலத்த எதிர்பார்ப்போடு நீட் தேர்வு முடிவினை இன்று பார்த்துள்ளார். அதில் 68 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார்.
மிகுந்த வேதனையில் வீடு வந்த ரிதுஸ்ரீ, இன்று மதியம் வீடு வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால், ரிதுஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்தார். மதிப்பெண் குறித்து யாரிடம் எந்த தகவலும் சொல்லவில்லை. மனவிரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, வீட்டினுள் ரிதுஸ்ரீ தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பெற்றோருக்கும், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னலாடை கம்பெனியில் இருந்து பதறி அடித்த ஓடிவந்த பெற்றோர், தங்களுடைய ஒரே மகளை சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இதைக் கண்டு அக்கம்பக்கத்தினரும் கண்ணீர் வடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர், மாணவியின் உடலை உடற்கூறாய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வு தோல்வி என்பது இறுதியல்ல... தொடக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைக்கு 044-24640050, 914424640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.