திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குங்குமம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மேஸ்திரி வேலை செய்துவருகிறார். பொங்கலை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் வாங்கிக்கொண்டு பல்லடத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து குங்குமம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் செல்வராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல் துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.