திருப்பூர் மாவட்டம் சித்தம்பாளையம், புதூர், புள்ளியப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்வதற்காக சித்தம்பாளையம் பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே தொட்டி கட்டும் பணி நடைபெற்றுவரும் பகுதியில் அங்காத்தாள் என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அவர் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு வரும் வழியில் தொட்டி கட்டுவதாகக் கூறி அப்பணிக்கு இடையூறு செய்து வந்துள்ளார்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் இந்நிலையில் இன்று(மார்ச்.17) தொட்டிக் கட்டும் பணிக்கு வந்தவர்களை அங்காத்தாள் வழக்கம்போல், பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். இதை தட்டிக்கேட்ட பொதுமக்களையும், அப்பெண் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், அங்காத்தாளைக் கண்டித்து பல்லடம் உடுமலை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அரசு அலுவலர்கள், காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.