பாஜக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் தனியார் மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 13) நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் முருகன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அனைத்து விவகாரங்களிலும் ஸ்டாலின் அரசியல் செய்கிறார். மாணவர்களின் உயிருடன் அவர் விளையாடக்கூடாது. தேர்வு பயம் தொடர்பாக அரசு சார்பில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மாணவர்களின் சென்டிமென்ட்டை தவறாக திசை திருப்புகிறார்கள்.
நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றம் வரை சென்று, அதன் தீர்ப்பின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.
சில நாள்களுக்கு முன்னர் பாஜக மூத்த நிர்வாகிகளுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்போது அதுவெல்லாம் சுமுகமாக இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை.
தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் அனைத்து தனியார் பள்ளிகளையும் போல அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அதிமுக அரசின் கொள்கை என்பது இரு மொழிக் கொள்கை என சொல்கிறார்கள். எங்களுக்கும் கொள்கை உள்ளது போல் அவர்களுக்கும் ஒரு கொள்கை உண்டு. எங்கள் நிலைப்பாடு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
2016இல் 75 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது பாஜக தான். அதன் அடிப்படையில் பாஜக தற்போது 60 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளோம். தேர்தல் வரும்போது தான் இந்த மாற்றம் பற்றி தெரியவரும்'' என்றார்.
இதையும் படிங்க:நீட் அச்சத்தால் தற்கொலை : திருச்செங்கோடு மாணவரின் உடல் தகனம்!