திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிறுவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதையும் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான யுக்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்த 11 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதில் ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு இந்த போதை ஊசிப் பழக்கம் என்பது முற்றிலும் புதியது. இந்த போதை ஊசி மருந்து திருப்பூரிலிருந்து சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் உயிர் காப்பான் மருந்துகள் என்று அழைக்கப்பட்டாலும், போதைக்கு பயன்படுத்தும்போது உயிர்க்கொல்லும் மருந்தாக அமைகிறது. இந்த போதை ஊசியை உபயோகிப்பதனால் 24 மணி நேரமும் போதையில் இருக்கலாம்.