திருப்பூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவரும், திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு கவுன்சிலருமான பாத்திமா தஸ்ரினின் தந்தையுமான சையது முஸ்தபா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "45வது வார்டை திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கினார்கள். அதை அனைத்து கட்சிகளும் முழு மனதோடு வெற்றி பெறச் செய்தார்கள். அதன் பிறகு திமுகவின் பகுதி செயலாளர் உசேன், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுக்கிறார். திமுக எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி அரசு அலுவலர்களை மிரட்டுகிறார்.
இவ்வாறு 10 முதல் 15 நாட்கள் தாமதம் செய்த பின்னர், அவரே அந்த பணியை செய்வது போல காட்டிக் கொண்டு, முஸ்லீம் லீக் கவுன்சிலர் செய்யாதது போல காட்டிக் கொள்கிறார்கள். இதுவரைக்கும் கடந்த ஒன்றரை வருட காலத்தில் 10 அதிகாரிகளை மாற்றி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் 200 இடங்களில் முறைகேடாக குடிநீர் குழாயை போட்டு இருக்கிறார்கள்.
இதனால் அரசுக்கு வர வேண்டிய வருமானம் இழப்பு ஏற்படுகிறது. மாமன்ற உறுப்பினர் பாத்திமா தஸ்ரின், மாமன்ற கூட்டத்தில் இது பற்றி சொன்னாலும், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் அதை மறைக்கிறார்கள். முறைகேடான பைப் இணைப்பு பிரச்சினைகளுக்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருக்கிறோம். முறைகேடாக போடப்பட்ட பைப் இணைப்புகளை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். அந்த பகுதி பைப் இணைப்புகளை துண்டிக்காமல், அதற்கான நெறி முறையை பின்பற்றி முறைப்படுத்த வேண்டும்.