திருப்பூர் அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், திமுகவின் மாணவரணி பொறுப்பிலுள்ள இவர் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி இரவு அப்பகுதியில் பாலமுருகன் நடந்து சென்ற போது, மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், கொலை செய்த கும்பல் திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காவல் துறையினர் அந்த கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர்-சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ராயபுரம்-மிலிட்டரி காலனியைச் சேர்ந்த நந்தகுமார், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார், சென்னை-குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், விக்னேஷுக்கும், பாலமுருகனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையின் காரணமாக விக்னேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்! மேலும், கைது செய்யப்பட்ட 4 பேரும் கை கால்களில் அடிபட்டு கட்டுப்போட்ட நிலையில், இன்று மாலை திருப்பூர் ஜேஎம்1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.