திருப்பூரைச் சேர்ந்த காஜா மைதீன் என்பவரின் நான்கு வயது சிறுவன் ஜாவித் அகமது, நேற்று (ஜூலை 27) காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனான். இதையடுத்து மகனை காணவில்லை என காஜா மைதீன் அக்கம்பக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தேடியுள்ளார். இருப்பினும் ஜாவித் அகமது கண்டறியப்படாத நிலையில், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக வாட்ஸ்அப்பில் தனது மகனின் படத்தை பகிர்ந்து, மகன் ஜாவித் அகமதுவை காணவில்லை எனவும், அவரை கண்டால் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் தனது செல்போன் எண்ணையும் பகிர்ந்தார். இந்தச் செய்தி திருப்பூர் முழுவதும் வேகமாக பரவியது. சிறுவனை காணவில்லை என்ற இந்த தகவல் ஏராளமானோரால் பகிரப்பட்டதுடன், சிறுவனை தேடும் முயற்சியில் பலரும் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சிறுவனை கடத்திய அடையாளம் தெரியாத நபர்கள், சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் அச்சமடைந்து, கடத்தப்பட்ட சிறுவன் ஜாவித் அகமதுவை எங்கும் கொண்டுச் செல்ல முடியாமல் மாலை நேரத்தில் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அருகே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.