திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மங்கலம் பகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, மதிமுக வேட்பாளர் முத்துரத்தினத்தை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “ இஸ்லாமிய சகோதரர்கள், அனைத்து சமுதாயத்தினருக்கும் வணக்கம். விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் விண்ணுக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை மட்டும் 225 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்வதால், நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
’இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. இஸ்லாமியகள்மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது’ என நேற்று முன்தினம் (மார்ச் 19) அமெரிக்காவில் இருந்து வந்த பாதுகாப்பு அமைச்சர் லாயிஸ்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். தாத்திரியில் 104 டிகிரி காய்ச்சலில் படுத்திருந்த முகமது அத்தலாக் என்பவரது வீட்டில் புகுந்து, அவர் மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி அடித்தே கொன்றார்கள். இதனைக் கண்டித்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரை சுட்டுக் கொன்றார்கள். எனவே, இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைய, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் எடுபிடி எடப்பாடி அரசு துணையாக செயல்படுகிறது.