திருப்பூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கும் போது, குடைப்பிடித்து வந்தால்தான் மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஒன்றில் தடுப்புகள் அமைத்து, 6 அடிக்கு ஒருவர் நிற்பது போல் கட்டைகள் கட்டி வட்டம் வரைந்து, தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தடைகளைத் தாண்டி மதுவாங்குவது எப்படி? குடிமகனின் ஒத்திகை வீடியோ! - மது வாங்க ஒத்திகை பார்த்த குடிமகன்
திருப்பூர்: டாஸ்மாக் கடை முன்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் வழியாக சென்று எவ்வாறு மது வாங்குவது என்பது குறித்து குடிமகன் ஒருவர் ஒத்திகைப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
ஒலிப்பெருக்கி அமைத்து ஒருவருக்கு எத்தனை குவாட்டர் பாட்டில்கள் வழங்கப்படும் என்பதும், குடைப்பிடித்து வரவேண்டும் என அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை நாளை திறந்தவுடன் குடையுடன் எவ்வாறு சென்று மது வாங்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள அப்பகுதியை சேர்ந்த குடிமகன் ஒருவர் குடையுடன் வந்து தடுப்பு வேளிக்குள் முறையாக சென்று எவ்வாறு மது வாங்குவது என்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.