திருப்பூர்: பொள்ளாச்சி அருகே மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், சுமார் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது ஆகும். இங்கு 30க்கும் மேற்பட்ட புலிகள் உள்பட ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் அமராவதி வனச்சரகப் பகுதியில் கழுதக்கட்டி ஓடையில் நேற்று (அக்.23) மாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்துள்ளனர்.
அப்போது, அந்த பகுதி மணலில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். மேலும், இறந்து போன அந்த புலிக்கு 8 அல்லது 9 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அப்பகுதியை சோதனையிட்டதில், மனித நடமாட்டத்திற்கு அறிகுறி ஏதுமில்லை என்றும், இறந்து போன புலியின் உடலில் காயங்களோ அல்லது குண்டடிபட்ட தடமோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.