திருப்பூர்:குளத்துப்புதூர் பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழுவாக பி.எஸ்.எஸ் மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய்க் கடன் பெற்றுள்ளனர். அதற்கு வாரம் 1000 ரூபாய் வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுவரை 28 வாரம் பணம் முறையாகச் செலுத்திய நிலையில், தற்போது 29 ஆவது வாரம் 9 பேர் மட்டும் பணம் செலுத்தி உள்ளனர்.
மீதம் உள்ள ஒருவர் உடல்நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளதாகவும், மீதம் தர வேண்டிய 600 ரூபாய் பணத்தைக் காலையில் தருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ.600 பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த சிவானந்தம் என்ற பணம் வசூல் செய்யும் நபர் இரவு 12 மணிக்குக் குழுவில் உள்ள 10 பெண்களையும் பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் எனக் கூறி நடுரோட்டில் பிடித்து நிற்க வைத்துள்ளார்.
இதனிடையே 11 மணிக்கு மேல் வீட்டின் கதவைத் தட்டி பெண்களை வெளியே அழைத்து வந்ததால் தனது கணவர் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கதவை மூடிவிட்டார் எனப் பெண்கள் கண்ணீர் சிந்திய படி சாலையில் நின்றிருந்தனர். தகவலறிந்து வந்த பெண்களின் உறவினர்கள் கூடி வசூல் செய்ய வந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் வசூல் செய்ய வந்த நபர் நைசாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.