திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்துவருபவர்கள் தங்கராஜ்-சுமதி தம்பதியினர். இவர்களுக்கு விக்னேஷ் (9), பவனேஷ்(8) என இரண்டு மகன்கள் உள்ளனர். பனியன் தொழிலாளியான இருவரும் ஜூன்11ஆம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த பவனேஷ்ஷை காணவில்லை என்பதால் பதறியுள்ளனர்.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் இதுதொர்பாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல் துறையினரும் சிறுவனைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 12) காலை பல்லகவுண்டன் பாளையம் குளப்பகுதிக்குச் சென்றவர்கள், அங்கு வயிறு, கழுத்து பகுதிகளில் காயங்களோடு சிறுவன் ஒருவன் இறந்துகிடப்பதாக ஊத்துக்குளி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அச்சிறுவன் பவனேஷ் என்பதையும், அவன் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளான் என்பதையும் உறுதிப்படுத்தினர். பின்னர் உடலை உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.