பின்னலாடை துறையில் ஏற்றுமதியின் மூலம் ஆண்டிற்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி, உள்நாட்டுப் பின்னலாடை உற்பத்தியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் எனப் பின்னலாடை வர்த்தகத்தில் இந்தியாவின் முன்னோடி நகராக விளங்கிவந்த திருப்பூர், தற்பொழுது கரோனா பாதிப்பால் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இந்தியாவின் மொத்த காட்டன் உற்பத்தியில் 90 விழுக்காடு அளவிலான காட்டன் பின்னலாடைகள் திருப்பூரில் தான் தயாராகின்றன. 40 நாள்களுக்கு மேலான ஊரடங்கு பின்னலாடை தொழில் துறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏராளமான தென் மாவட்ட மக்களும், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்த இத்தொழில் ஏறக்குறைய அதலபாதளத்துக்குள் சென்றுள்ளது என்றே கூறலாம். இதிலிருந்து மீள குறைந்தது ஒரு வருடத்திற்கும் மேலாகும் என்கின்றனர் அத்துறை சார்ந்தவர்கள்.
இத்தொழிலை நம்பி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பல்லடம், காங்கயம், தாராபுரம், ஊத்துக்குளி, அவிநாசி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் பேருந்து மூலம் தொழிலாளர்கள் பணிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். தற்போது பேருந்து போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ள நிலையில், அவர்களால் பணிக்குச் செல்ல முடியவில்லை. பெரிய நிறுவனங்கள் திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பணியாளர்களை, வாகனங்கள் மூலம் அழைத்துவந்தாலும், சிறிய நிறுவனங்கள் பணியாளர்களை அழைத்துவர முடியாமல் திணறிவருகின்றன. இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் பணி செல்ல முடியாமல் தவிப்பதாக பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தொழிலாளி ஆறுமுகம் கூறுகையில், “நான் கம்பளி தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். 40 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்ததால், கம்பெனி எதுவும் திறக்கப்படாததால், வேலையிழந்து அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினேன்.