திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வரும் தம்பதி சேகர் - ஹேமலதா. இவர்கள் வீட்டிற்கு செல்லும் பொது வழித்தடத்தை மறித்து மூர்த்தி என்பவர் வீடு கட்டியுள்ளார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த ஹேமலதா, மாநகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஹேமலதா இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில், தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அங்கிருந்து ஹேமலதா கலைந்து சென்றார்.