மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் தொழில்கள் நசிந்து விட்டதாகவும் கூறி, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கு தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் திருப்பூரில் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காதர் பேட்டையில் உள்ள 500க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அதன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.